RSS

ஒரு கேமராவின் ஏக்கம்

27 Jul

கல்லையும் பொன்னாக ஆக்கும் கடவுள், தனது படைப்பாற்றல் திறன் மூலமாக, தனது படைப்புக்களை அழகாக படம் பிடிக்கும் கேமராவிற்கு, ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். ஒரு கேமராவை தேர்வு செய்து, உயிரோடு உணர்வையும் கொடுத்து அதை ஒரு நாள் மகிழ்விக்க முடிவு செய்தார். அந்த பாக்கியம் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசிக்கும் சிவாவின் கேமராவிற்கு கிடைத்தது.

சிவாவை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.சிவா ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க வாலிபர். சிவாவிற்கு திருமணம் ஆகி பதினான்கு வருடங்கள் ஆகி இருந்தது. மனைவியின் பெயர் மீரா. அவர்களுக்கு பதிமூன்று வயதில் ராகுல் என்ற ஒரு மகன். கணவன் மனைவி இருவரும் தங்கள் பெங்களூர் ஐ ஐ யம் இல் ஒன்றாக எம் பி ஏ படிக்கும் காலத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் மனம் நிறைய பணம் கிடைத்து அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் குடி பெயர்ந்தனர். அவர்களது முதல் வருட திருமண நாளில் மீரா முழு மாத கர்ப்பிணியாக இருந்தாள். அடுத்த வாரத்திலேயே ராகுல் அமெரிக்காவின் குடிமகன் ஆகும் தகுதியை பெற்றான். சிவாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை, சிவாவிற்கு விடுமுறை நாள். ராகுலின் பள்ளி ஆண்டு விழாவான அன்று, மூவரும் காலையில் கோல்ஸ் தெருவில் உள்ள டாக்டர் ரொனால்ட் ஏ மக்னைர் ஹை ஸ்கூல்லுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். ராகுலின் ஏழாம் கிரேடு பிரிவிற்கான ஆண்டு விழா இசை போட்டியில், பிரபல இசை மேதை பீத்தோவனின் வயலின் இன் சொனாட்டா நம்பர் 5 இன் எப் மேஜர் (ஸ்ப்ரிங்) என்ற பகுதியை வயலினில் இசைத்து முதல் பரிசை வென்று இருந்தான். அந்த நகரின் கவர்னரான கிறிஸ் கிறிஸ்டி கையால் பெற இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இசையில் சிறந்த பரிசு பெற்றவர்களில், ராகுலின் வயலின் இசை அன்று பள்ளியில்அரங்கேற வாய்ப்பு கிடைத்து இருந்தது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூற வேண்டும். மாலையில் அவர்கள் ராகுலின் பள்ளியில் இருந்து சுமார் பதினாறு மைல் கல் தொலைவில் உள்ள பிரபல ப்ரிஸ்பை ஐரிஸ் கார்டன் என்ற பூங்காவிற்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

சரியாக காலை பத்து மணி அளவில் சிவா தன் காரில் பள்ளிக்கு மீரா மற்றும் ராகுலுடன் வந்து இறங்கினான். தன்னுடைய தோளில் தொங்க விடப்பட்டு இருந்த கேனான் டிஜிட்டல் கேமரா அன்று காலையே உயிர் பெற்று இருந்தது. அப்பொழுதுதான் சிவா தன் கேமராவை முழுவதுமாக சார்ஜ் செய்யவில்லையே என்று உணர்ந்தான். சற்றே ஒரு பதற்றம். ராகுலின் இசையை முழுவதுமாக படம் எடுக்கும் வரை சார்ஜ் தாங்குமா? அல்லது மாலை பூங்காவின் எழிலை குடும்பத்துடன் படம் எடுக்க எப்படி முடியும் என்றெல்லாம் எண்ணம் ஓடியது. பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், வாட்சப்பில் தன்னையும், தன் அனுபவங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்ற கவலை. அப்போதைய கேமரா சார்ஜின் நிலை, சூழ்நிலையை மேலும் மோசமாக்கியது. சரி, இயங்கும் வரை எடுப்போம் என்று தனக்கு சமாதானப் படுத்தியும், கவலை விடாமல் சூழ்ந்து கொண்டது.

அப்பா, இவன் தான் என்னோட வகுப்பறை தோழன் என்று பேட்ரிக்கை அறிமுகம் செய்து வைத்தான் ராகுல். மேலும் அவனது சில தோழர்கள் அவன் அருகில் வந்து பேசத் தொடங்கினர். சிவா, ராகுலை தன் தோழர்களோடு சேர்த்து பள்ளியின் கட்டிடம் பின்புறம் தெரியும் அமைப்பில் ஒரு புகைப்படம் எடுக்க கேமராவை ஆன் செய்தான். கேமரா தான் மூடி இருந்த கண்களை முதல் முதலாக திறந்த வெளி உலகைக் கண்டு உணர போகிறோம் என்ற துள்ளலில் இருந்தது. கேமராவின் கண்கள் திறந்தன, முதல் வெளிச்சம். கேமராவிற்கு கண்கள் கூசியது. சிறுவர்களின் புன்னகை தன்னை வரவழைப்பதுபோல் கேமராவிற்கு தோன்றியது. அதற்கு சற்று நேரம் அவர்களுடன் உரையாட ஆசையாய் இருந்தது. ஆனால் சட்டென்று தன் பார்வை பள்ளியில் குழுமியிருந்த கூட்டத்தை பார்த்தது, பிறகு சில குடும்ப நண்பர்கள் சிலருடன் மீராவின் முகம் பார்த்தது. அடுத்து சற்று நிமிடங்களில் மீராவின் மூலமாக சிவாவை முதல் முறையாக பார்த்தது. கேமராவின் கண்கள் பள்ளி கட்டிடத்தையும், அதை ஒட்டி இருந்த விளையாட்டு மைதானத்தையும் பார்த்து கண்கள் சுழன்றன.

பள்ளி ஆண்டு விழாவின் நடுவே, ராகுலின் இசை துவங்க இருந்தது. சிவா தன் மனைவியுடன் அருகில் இருந்த இருக்கையில் இருந்து எழுந்து, மேடையின் அருகில் நின்று கொண்டு, ராகுலின் நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக தன்னை தயார் நிலையில் வைத்திருந்தான். ராகுல் மேடையின் மேல் ஏறி தன் வயலினை இசைக்க ஆரம்பித்தான். சிவா தயார் நிலையில் வைத்திருந்த கேமராவை இயக்க ஆரம்பித்தான். அரங்கமே நிசப்தமாக இருந்தது. அவனுக்கு நினைவெல்லாம் சார்ஜ் பற்றியதுதான். அது எரிச்சலையும் கோபத்தையும் அவனுக்கு மூட்டியது. பதற்றத்துடனே ஒளிப்படத்தை எப்படியாவது எடுத்து முடிக்க முயற்சித்துக் கொண்டு இருந்தான். கேமரா அமைதியாக இசையை மட்டுமே உள்வாங்கி ரசித்துக் கொண்டு இருந்தது. குழுமி இருந்த கூட்டத்தையும், அரங்கத்தினையும் தன் கண்கள் காண முற்படும் போது கேமரா தான் ரசிக்கும் தருவாயில், தன்னை சிவா ஏன் இப்படி இயக்குகிறான் என்று பொறுமை இழந்தது. பிறகு சற்று நேரத்தில் அரங்கமே கரகோஷம் எழுப்பியது மட்டும் சிவாவின் காதில் பலமாக விழுந்தது. மறுபடியும் கேமரா அந்த கரகோஷ ஒலி எழுப்புவர்களை கண்ட பொழுது, அது ராகுலின் மகிழ்ச்சியை காண தவறியதை உணர்ந்து முகம் சுளித்தது. பிறகு சிவா, தன் கேமராவில் பதிவுகள் சரியாக அமைந்துள்ளதா என்பதனை சரி பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஆண்டு விழா நிறைவு பெறும் தருவாயில் ராகுல் பரிசுபெறும் நிகழ்வை கேமராவின் லென்ஸ் வழியாக சிவா பல கோணங்களில் எடுத்து தள்ளினான். அதில் தான் நினைத்தபடி சில ஷாட்கள் விழவில்லையே என்ற ஏக்கம் கூட இருந்தது. பிறகு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மதிய விருந்தை முடித்துக் கொண்டு மூவரும் ப்ரிஸ்பை ஐரிஸ் கார்டன் வந்தடைந்தனர்.

சிவா கேமராவின் சார்ஜை அவ்வப்போது பார்த்து கொண்டு இருந்தான். இதுவரை கேமரா இயங்கி வருவதை அவனால் நம்ப முடியவில்லை. ப்ரிஸ்பை ஐரிஸ் கார்டனின் சிறப்பே எண்ணற்ற பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ஐரிஸ் செடியின் பூக்கள் தான். மலைகளை ஒட்டி அமையப்பெற்ற இந்தப் பூங்கா ஏறத்தாழ ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஐரிஸ் பூங்கா பத்தாயிரத்துக்கும் அதிகமான ஐரிஸ்களுடன், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு ரகங்கள் கொண்டுள்ளது. அதன் சீசனில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூக்கள் பூத்துக் குலுங்குவது அதன் தனிச் சிறப்பு.

கார்டனில் சிவா நுழைவாயிலில் நுழையும் பொழுது கேமராவின் கண்கள் விழித்தன. பூங்காவையாவது சற்று நின்று நிதானமாக பார்க்கலாமே என்று ஆசை கொண்டது கேமரா. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்கள் கண நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி வெவ்வேறு காட்சிகளை கண்டது. எதையுமே முழுவதுமாக கேமராவால் உள்வாங்கிக்கொள்ளவோ, ரசிக்கவோ முடியவில்லை. கேமராவிற்க்கு பூத்துக் குலுங்கும் மஞ்சள் நிற ஐரிஸ் பூக்கள் தான் விழியில் பார்த்ததில் மிகுந்த ஆனந்தம் அடைந்தது.ஆனால் மறுகணமே கூட்டத்தின் மேல் ஒரு பார்வை, அடுத்த கணம் ஊதா நிற ஐரிசுடன் ராகுலின் முகம், மறு கணம் வெள்ளை நிற ஐரிசுடன் மீராவின் உருவம். கேமராவால் எதை பார்ப்பது, எதை ரசிப்பது என்பதே விளங்கி கொள்ள முடியாமல் குழம்பி இருந்தது.

அன்று இரவு மூவரும் கலைத்துப் போய் வீடு திரும்பினர். அவசர அவசரமாக சிவா தன் கேமராவில் பதிவானவைகளை பதிவிறக்கம் செய்து, தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தான். பிறகு தன் கேமராவை பத்திரமாக கப்போர்டில் வைத்து மூடினான். அன்று இறுதிவரை கேமராவின் சார்ஜ் முடிந்து போகாமல் இயங்கியது பெரும் ஆச்சர்யத்தை சிவாவின் மனதில் ஏற்படுத்தியது. கேமராவின் காலை நிலவரப்படி அது இரண்டு மணி நேரம் ஒத்துழைத்து இருந்தால் அதுவே பெரிய விஷயம். ஆனால் இரவு வரை இயங்கியது எப்படி என்பதை, சிவாவால் யூகிக்க கூட முடியவில்லை.

சரியாக இரவு பத்து மணிக்கு கடவுள் கேமராவை பார்த்து, என்ன சந்தோஷமா, எல்லாம் நல்லா அனுபவிச்சியா என்று கேட்டார். கேமரா துவண்ட முகத்துடன், எல்லாம் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆனால் சிவா என்னை முழுவதுமாக ரசிக்க விட வில்லை என்று ஏங்கியது. சரி இப்போது என்னதான் வேண்டும் உனக்கு என்றார் கடவுள்.

எனக்கு ஒரேமுறை, ஒரு நாள், மனிதனாக உயிர் கொடுங்கள், இயற்கையையும் நிகழ்வுகளையும் உள்வாங்கி ரசிப்பதற்கு என்றது. உடனே கருணையுடன் கடவுள் ஆசி வழங்கி, பிரதி எடுப்பதாலோ என்னவோ, அந்த கேமராவை ஒரு பெண்ணாக மாற்றி, தேவி என்று பெயர் வைத்தார். கூடவே ஒரு புதிய ரக கேமராவையும் நினைவாக வழங்கினார்.

மறு நாள் காலை, தேவி எழுந்து தன் ஆசையாக காண வேண்டிய இடங்களுக்கு எல்லாம் சென்று கலைப்புடைய இரவு வீடு திரும்பினாள். கடவுள் அவளை பார்த்து, இப்பொழுது மகிழ்ச்சியா என்று கேட்டார். தேவி, கேமரா தன்னை முழுவதுமாக ரசிக்க விடவில்லை என்று மறுபடியும் ஏங்கினாள். அன்று சிவா கேமராவை இயக்கிப் பார்த்தான். அப்பொழுது சார்ஜ் முழுவதுமாக நின்று இருந்தது.

கேமராவிடம் இருந்து விடை பெற்ற கடவுள், விண்ணில் இருந்து ஒரு அழகிய பாலைவனத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த ஒட்டகம் ஒன்று தன் கண்ணில் தென்பட்ட காய்ந்த இலைகளையும், முட் செடிகளையும், விதைகளையும் மேய்ந்து கொண்டு இருப்பதை உற்று நோக்கினார். முட் செடிகளை உண்ணும் போது அதன் வாயில் இருந்து ரத்தம் வருவதை அது என்றுமே பொருட்படுத்தியது இல்லை போலும். போதிய உணவு கிடைக்காததால், சில சமயம் தன் முதலாளியின் டென்ட் கொட்டகை, சில கிழிந்த கிடந்த தோல் பைகளைக் கூட விழுங்கியது. பல மணி நேரம் உணவுக்காக அலைந்து திரிந்த அந்த ஒட்டகம், அன்று இரவு, நட்சத்திரங்கள் எழில் சூழ்ந்த தருவாயில், ஒரு இடத்தில் மண்டி இட்டு அமர்ந்தது. தான் விழுங்கிய உணவு பதார்த்தங்களை, சிறிது சிறிதாக வாயில் கொண்டு வந்து, மெதுவாக ஒவ்வொன்றையும் தனது பற்க்களால் மென்று உண்ணத் துவங்கியது. காலை முதல் உண்ட அனைத்து உணவையும் இரவுதான் செரிமானம் செய்ய வழி வகுத்தது அந்த ஒட்டகம்.

நாம் முதலில் ஒன்றை ரசிப்பதை விட, மற்றவர் நாம் ரசித்ததை ரசிப்பார்களா என்பதிலேயே மனிதன் மிகுந்த கவனம் செலுத்துகிறான் என்று கடவுள் வியந்து போனார். சிவாவும் அன்று இரவு தான் எடுத்த புகைப்படம், மற்றும் ஒளிப் படங்கள் ஒவொன்றாக பார்த்துப் பார்த்து ரசித்து மகிழ்ந்தான்.

இரா. ராஜேஷ் குமார்

26 ஜூலை 2016.

ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 

Advertisements
 
Leave a comment

Posted by on July 27, 2016 in சிறுகதை

 

Tags: , , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: