RSS

மரம்

18 May

தென்றல் வீச அசைபோடும்

உன் கிளைகள் ஓர் அழகு

பூக்கள் விடுத்து மலரும்

உன் புன்னகை ஓர் அழகு

காய் வளர்த்து கனி உதிர்த்திடும்

உன் தாய்மை ஓர் அழகு

வெப்பம் தாங்கி நிழல் தந்திடும்

உன் கருணை பேரழகு

 

என்னே உன் உயரம்!

என்னே உன் செழிப்பு!

பாரபச்சமற்ற உன் தன்மை

பல்லுயிர்க்கும் வீடானாய்

நான் சுவாசிக்கும் காற்றோ

நீ சுத்தீகரித்த ஒன்று

நான் வாழும் பூமியோ

நீ குளிர்வித்த சோலை இன்று

 

என் வீட்டுக் காவலானாய்

நான் உறங்க மடியானாய்

எந்தன் பொருளானாய்

எனக்கே உணவுமானாய்

உச்சி முதல் வேர் வரை

உன் சேவைக்கு கணக்கில்லை

 

வேர்களின் மூலம்

உன் சக இனத்தவரிடம்

உதவிடும் உன் பாங்கு

பேசிடும் உன் மொழி

காத்திடும் உன் கரங்கள்

ஆராய்ச்சியாளன் அறிவித்த ஆச்சர்யங்களில் ஒன்று

 

தென்றலின் மூலம்

நீ எழுப்பும் சலசலப்பின்

மொழி அறியேன் நான்

ஆனால் அதில் கோபம் இல்லை

என்பது மட்டும் என் திண்ணம்

 

இத்தனையும் நீ செய்தும்

விருதுகளும் பாராட்டும் ஏங்கும் இந்த உலகத்தில்

மாற்றம் ஏதும் இல்லாமல்

நீ நீயாக நின்றாயே!

நன்றி கூட பாராமல்…

 

ஓ மரமே!

உன்னிடம் ஒப்பிடுகையில்

நான் என்ன செய்தேன் இவ்வுலகிற்கு?

வெறும் பாரம்தான் என்பதனை

நன்குணர்ந்தேன் இப்பொழுது!

 

வெட்டினாலும் தடுக்காத உன்னை

ஆரத் தழுவி முத்தமிட

என் மனம் ஏங்குகிறது

நல்லவேளை நீ பேசுவதில்லை

ஒருவேளை உன்னைத் தவறாக

புரிந்து கொண்டு இருப்பேனோ என்னவோ

 

புத்தனே உன் அடியில் ஞானம் பெற

மனிதனும் உன் முன் சிறியவன்தான்

 

ஆனால் ஒன்று

உன்னை ஒருவேளை வளர்க்காமல் போனாலும்

வெட்டாமல் காப்பதுவே நான் செய்யும் கைமாறு

 

 

இரா. ராஜேஷ் குமார்

17 மே 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

 
Leave a comment

Posted by on May 18, 2018 in கவிதை

 

Tags: , , , , ,

Leave a comment