RSS

Category Archives: கட்டுரை

புயலின் பெயர் ரோஹிங்கிய

இர்மா புயல் இன்று உலகின் தலைப்புச் செய்தியாக உள்ளது. சென்ற மாதம் ஆகஸ்டின் இறுதி வாரத்தின் துவக்கத்தில் ஹார்வி புயல் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரம் மற்றும் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப் போட்டு சுமார் முப்பதாயிரம் மக்களை இடம் பெயர வைத்தது. அதே சமயம் உலகின் மறுமுனையில் உள்ள மியான்மர் நாட்டில் லட்சத்திற்கும் மேலான ரோஹிங்கிய மக்கள் இடம் பெயர நேரிட்டது. இங்கு இடம் என்பது வெறும் ஊர் விட்டு ஊரோ, அல்லது மாநிலம் விட்டு மாநிலமோ கிடையாது, நாடு விட்டு நாடு. அதிலும் இது ஒரு புயலால் நேரிட்டது அல்ல, இயற்கை சீற்றத்தையும் மிஞ்சும் அளவுக்கு வக்கிரமும், சர்வாதிகாரமும் உடைய சக மனித மனங்கள் தான் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

rohingya

Courtesy: Web.

ரோஹிங்கிய மக்கள் யார்? இவர்களுக்கு ஏன் இந்தக் கொடுமை. சுருக்கமாகப் பார்ப்போம். மியான்மர் தேசம் 87.9% புத்த மதத்தை கொண்டுள்ளது. இதில் 4.3% இஸ்லாம் மதத்தை தழுவியவர்கள். ரோஹிங்கிய மக்கள்  பெரும்பாலாக இஸ்லாம் சமூகத்தை சார்ந்தவர்களாகவும், இந்து இனத்தை மிகக் குறைவாகவும் உடைய சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர் . கல்வி, வேலை வாய்ப்பு, சுதந்திரம் எதற்கும் உரிமை இழந்து, குடிஉரிமை அற்று மியான்மரின் ரஃக்ஹின் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 2013 ஆம் ஆண்டு ஐநாவால் உலகின் மிகவும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர் என்று விவரிக்கப்பட்டவர்கள்.  ரோஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் சிலர் பர்மிய எல்லை போலீஸ் போஸ்டை தாக்கியதற்கு பதிலடியாக எங்களின் ரோஹிங்கிய தாக்குதல்கள் என்று மியான்மர் ராணுவம் தரப்பாக ஒரு செய்தி. எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள். கற்பழிப்பு, வீடுகள் சூறையாடப்படுவது, வீடுகளுக்கு தீ வைப்பது, கொலை என்று ரோஹிங்ய மக்கள் பட்ட துன்பத்துக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

மியான்மர் ராணுவத்துடன் கைகோர்த்து மியான்மரின் புத்த மத மக்களும் ரோஹிங்கிய மக்களை விரட்டி அடிப்பது மிகவும் அதிர்ச்சி தரும் தகவல். புத்த மதம் உலகிற்கு உணர்த்தியது ஒன்று, ஆனால் இன்று மதம் மட்டும் பெயரளவில் நிற்க, பல மியான்மர் புத்த மக்கள் பின்பற்றுவது வேறொன்று. இந்தக் கொடுமைகள் தாங்காமல் வீடிழந்து, உறவிழந்து, பொருளிழந்து, மானம் இழந்து ரோஹிங்கிய மக்கள் நடை பயணமாக , ஆறுகள் கடந்து வங்க தேசம் நோக்கி அகதிகளாக பயணம் மேற்கொள்கின்றனர். இதில் என்னை மிகவும் பதறவைத்தது, ஆற்றைக் கடக்கும் பொழுது குழந்தைகள் நீரில் மூழ்கும் செய்தி மனித சமூகம் போகும் திசையை கேள்விக்குறியாக ஆக்குகிறது.

ஐநா சபை உட்கார்ந்த இடத்தில் இருந்து ஒரு கண்டன அறிக்கை. உலகத் தலைவர்கள் அவரவர்களுக்கு ஒரு கண்டன அறிக்கை.  கண்டனம் மட்டும் தெரிவிக்க ஐநா சபை எதற்கு, உலகத் தலைவர் என்ற அந்தஸ்து எதற்கு? சாமான்ய மனிதனாலும் முடியும் ஒரு கண்டன அறிக்கையை விட. ஷேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற ஜூலியஸ் சீசர் வசனத்தையே இன்று மாற்றி அமைக்கும்படி செய்துவிட்டால் அவள், “நீயுமா ஆங் சான் சூ கி?!!” என்று. தினந்தோறும் ஊடகச் செய்தியை பார்பவர்க்கும், செய்தித்தாளை வாசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு, தேநீரின் சுவைக்கு நடுவே அதுவும் ஒரு செய்தியாய் மறைந்து போகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் அதன் பிரச்சனைகள் அதன் தலைக்கு மேல் இருக்கிறது.

Rohingya-300x193

courtesy: Rohingya People who fled Myanmar to Bangladesh to escape violence (AP Photo/Anurup Titu)

உடனடியாக உன்னிடம் ஏதும் பகிர எனக்கு திறன் இல்லை என்றாலும், உனக்காகப் பகிர இப்பொழுது என் எழுத்து மட்டுமே உள்ளது ரோஹிங்கிய. உன்முன் சக மனிதனாக வெட்கித் தலை குனிகிறேன் என் இயலாமையின் நிலை கண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் அவர் பிரச்சனைகள் , குடும்பம், வங்கிக் கடன்கள், அலுவலக வேலைகள், குழந்தைகள் எதிர்காலம் என பல. இவற்றிக்கு இடையில் உன்னை மீட்டெடுக்க ஒருவரும் இன்னமும் முன்வராது மனித சமூகத்தின் நாகரீக வீழ்ச்சியின் வளர்ச்சி அன்றி வேறு என்ன? எத்தனை காதலர்கள், எத்தனை அப்பாக்கள், எத்தனை அம்மக்கள், எத்தனை நண்பர்கள், எத்தனை உறவுகள், எத்தனை பிஞ்சு உள்ளங்களின் கனவுகள், அத்தனையும் உலகம் பார்வையிட மண்ணோடு புதைக்கப்படுகிறது. கொதிக்கிறது என் நெஞ்சம் ரோஹிங்கிய இனப் படுகொலைகள் கண்டு. உலகின் அடுத்துவரும் மாபெரும் புயலுக்கு உலகம் ரோஹிங்கிய என்று பெயரிடட்டும்.

References:

https://en.wikipedia.org/wiki/Rohingya_people

https://en.wikipedia.org/wiki/Myanmar

https://en.wikipedia.org/wiki/2016%E2%80%9317_Rohingya_persecution_in_Myanmar

http://www.bbc.com/news/world-asia-41187517

இரா. ராஜேஷ் குமார்

10 செப்டம்பர் 2017.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

Advertisements
 
Leave a comment

Posted by on September 10, 2017 in கட்டுரை

 

Tags: , , , , , , , , ,

 
%d bloggers like this: