RSS

Tag Archives: Pugal cholan

ஆறுவது சினம் கூறுவது தமிழ்

எங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்த தருணம் அது. மூத்த மகனுக்கு அப்போது நான்கரை வயது. பெங்களூருவில் இருந்த நாட்களில் அவன் ஒரு அமைதியான பாலகன். பள்ளிக்குச் செல்வது, வாசிப்பது, நண்பர்கள், உறவுகளுடன் பழகுவது, ஊர் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் சென்னை வரவு, அவனிடம் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டேன். முன்னமே அண்ணி, என் மனைவி கருவுற்று இருக்கும் சமயத்தில் , குழந்தையின் புதுவரவு மகனை சிறிது காலம் கோபத்தையும் ஆத்திரத்தையும் மூட்டக் கூடும் என்று அறிவுறுத்தி இருந்தாள். நாங்களும் தயாராகவே இருந்தோம்.

நூறு சதவிகித அன்பு இருவருக்கும் முழுமையாக அளித்ததை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தனக்கு இதுநாள் வரை கிடைத்த அன்பிலும், அரவணைப்பிலும் ஐம்பது சதவிகிதத்தை தங்கை அபகரித்துக் கொண்டாள் என்று எண்ணி இருக்கக் கூடும். பள்ளியில் இருந்து வரும் பொழுதே சூரனைப் போல வருவான். சாமி ஆட்டம் ஆடி அடங்குவதுற்குள் என் மனைவி ஒரு வழி ஆகி விடுவாள். இதை அவள் என்னிடம் பகிரும் போது, அண்ணி கூறியதை கண்கூடாக உணர்ந்தேன். புதிய இடமாற்றம், பள்ளி, நண்பர்கள், தங்கையின் புதுவரவு, பள்ளிப் பேருந்தில் நீண்ட பயணம் என்று அவன் திக்கு முக்காடி இருந்திருக்க கூடும். அது உண்மை தான், இந்த நேரத்தில் இது இயல்பான ஒன்றுதான் என்று நினைத்து இருந்தேன். சில சமயம் கோபத்தில் ஆத்திரம் அடைந்து, கத்தி, சில சாமான்கள் வீசி எறியப்பட்டன. அவன் இந்த வித்தயை என்னிடம் இருந்து ஒரு சமயம் கற்று இருக்க வேண்டும்.

ஒன்று மட்டும் எனக்கு தெளிவாக இருந்தது. குழந்தையின் கோபத்தை என்றும் கோபத்தால் கட்டுப்படுத்த முடியாது என்று. அப்படிச் செய்தால் நான் அவனுக்கு மேலும் எப்படி கோபப்படுவது என்று கற்றுத் தந்ததாக அமயக் கூடும். சில சமயங்களில் பொறுமை இழந்து அடித்து இருக்கிறேன். அதற்காக பிறகு வருத்தமும், வெட்கமும் அடைந்து மன்னிப்பும் கேட்டு இருக்கிறேன். ஒரு எழுபது கிலோ எடையுள்ள மனிதன், ஒரு பன்னிரெண்டு கிலோ எடையுள்ள குழந்தையை அடிப்பது மிகவும் கோழைத்தனமானது என்பதை நான் நன்கு உணர்ந்து இருந்த தருணம் அது. அடிக்கவும் கூடாது, கோபப்படவும் கூடாது, ஆனால் மகனின் கோபத்தை மட்டும் எப்படி அடக்குவது என்று வியந்தேன். கணிதத்தையும், அறிவியலையும், தமிழையும், ஆங்கிலத்தையும் கற்றுத் தந்த கல்வி, திருமணத்திற்கு பிறகு, ஒரு குழந்தையை வளர்ப்பது எப்படி என்பதை கல்லூரியில் கூட அறிமுகமாக்காதது தற்கால கல்வி முறையின் மேலே சந்தேகத்தை எழுப்பியது.

இணையதளத்தில் குழந்தயின் கோபத்தை அடக்கும் வழிகளை அலசி ஆராய்ந்தேன். குழந்தை வளர்ப்பு கருத்தரங்குகளில் பங்கு கொண்டு வழி தேட முயன்றேன். இன்னும் ஏன், குழந்தை வளர்ப்பு நிபுணர்களிடம் கூட கலந்து ஆலோசித்தேன். எந்த பதில்களும் முழுமையாக உடனடி பலன் அளிக்கவில்லை. இருட்டறையில் அடைப்பது, குழந்தை விரும்பியதை கொடுக்காமல் இருப்பது, போன்றவை கிடைத்த சில பதில்களில் அடங்குபவை.

சரியான அணுகுமுறை தெரியாத நிலையில் இருந்த நாட்களில், அவன் கோபப்படும் போது மௌனமாக அமர்ந்து இருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் வெறித்தே அவனை நோக்கினேன். சில வாரங்கள் கழித்து ஒரு நாள் எதேர்ச்சையாக தொலைக்காட்சியில் பார்த்த ஒரு சொற்பொழிவுக்கு கதை என்னை மிகவும் பாதித்தது. என் தேடலின் விடை அதில் அமைந்து இருந்ததை நான் முன்னம் எதிர்ப்பார்க்கவில்லை. அந்தக் கதை பின்வருமாறு அமைந்து இருந்தது.

முன்னொரு காலத்தில் கரூரின் அருகில் அமைந்துள்ள இடத்தில் சிவகாமி ஆண்டார் என்ற சுமார் எழுபத்தி ஐந்து அல்லது என்பது வயதை உடைய ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பெரும் சிவ பக்தர். அவரின் கடந்த நாற்பது ஆண்டு காலமாக அருகில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு கூடை நிறைய பூ மாலை கட்டி எடுத்துப் போய், சிவ பெருமானுக்கு மாலை சாற்றி வருவதை தான் வழக்கமாக கொண்டு இருந்தார். அதில் சிறப்பு என்னவென்றால், அவர் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னமே எழுந்து, குளித்து திருநீறு பூசி, இருட்டி இருக்கும் பொழுதே தோட்டத்திற்கு சென்று, தன் நுனி விரல்களால் பூக்களை வருடி, தொடு உணர்ச்சி மூலம், அது பூத்து இருக்கிறதா அல்லது மொட்டாக இருக்கிறதா என்று உணர்ந்து, வண்டுகள் தேனை உறுஞ்சும் முன்னமே அதை பறித்து, தன் கையால் மாலை கட்டி கோவிலுக்குச் சென்று, சிவனை, தனக்கு ஏதும் வேண்டாது வணங்கி வந்தார்.

ஒருநாள் உச்சிக்கால பூசைக்காக மாலையை கூடையில் வைத்து, தலையில் சுமந்து தெரு ஓரம் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்தப் பகுதியை ஆண்டு வந்த புகழ்ச் சோழனின் நன்கு அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானை, பாகர்கள் அதன் மேல் அமர்ந்து வர, சில காவலர்கள் அதனை புடைசூழ அவ்வழியாக வந்தது. சிவகாமி ஆண்டார் ஒதுங்கி ஒரு ஓரமாக நின்று கொண்டார். சிவகாமி ஆண்டரின் அருகில் வந்த யானை, அவர் ஏந்தி இருந்த கூடையை பறித்து, பூமாலையை கீழே மண்ணில் புரட்டி வீச முற்பட்டது. அதனை தடுக்க முயன்ற சிவகாமி ஆண்டரை தாக்கிக் கீழே தள்ளியது யானை. அவர் பலத்த காயமுற்றார். அந்த சமயம் இதை பார்த்த எறிபத்த நாயனார் என்னும் சிவனடியார் யானை மீது மிகுந்த கோபம் கொண்டார்.

எறிபத்த நாயனார் தன் கையில் எப்பொழுதும் ஒரு கோடரியை ஏந்தியவாறு இருப்பதுண்டு.கம்பீரமான தோற்றம் உடையவர். யார் எல்லாம் சிவ பக்தர்களையோ, சிவனடியார்களையோ இழிவு படுத்திறார்களோ, அவர்களின் மேல் கடும் சினம் கொண்டு தாக்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார். அவர் கண்ட காட்சி அவரை ஆழ்ந்த கோபத்திற்கு ஆழ்த்தியது. உடனே தன் கையில் உள்ள கோடரியால் அந்த பட்டத்து யானையை வெட்டி வீழ்த்தினார். அதனை தடுக்க முற்பட்ட இரு யானை பாகர்களையும் வெட்டிச் சாய்த்தார். அந்த இடமே இரத்த வெள்ளமாகக் காட்சி அளித்து.

இந்தச் செய்தி சில காவலர்கள் மூலமாக புகழ்ச் சோழனுக்கு தெரிய வந்தது. புகழ்ச் சோழனும் ஒரு பெரும் சிவ பக்தர். சிவனடியார்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இருந்தும் அதிர்ந்து போன சோழ மன்னன் , தேரில் ஏறி படைகளுடன் சம்பவ இடத்தை வந்தடைந்தார். இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பட்டத்து யானையையும், இரு யானை பாகர்களையும் கண்டார். அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து நடந்ததை முழுவதுமாக அறிந்தார். மன்னனின் எதிரில் சற்று தூரத்தில் எறிபத்த நாயனார் தன் கோடரியுடன், சிவந்த கண்களுடன், கோபம் தணியாது நின்று இருந்தார்.

எறிபத்த நாயனார் அருகில் யாரும் செல்ல பயம் கொண்டனர். யார் எதிர்த்து வந்தாலும் அவரை வெட்டிச் சாய்க்க ஆயத்தமாய் இருந்தார். புகழ்ச் சோழன் தன் வாளுறையில் இருந்த வாலுடன் கைப்பிடித்து மெல்ல, எறிபத்த நாயனாரை நோக்கி வந்தார். மன்னன் தன் அருகில் வர வர, எறிபத்த நாயனாருக்கு கோபம் தலைக்கு ஏறி அனைவரும் அஞ்சும் வகையில் நின்று இருந்தார். புகழ்ச் சோழன், எறிபத்த நாயனாரை எதிர் எதிராக அருகில் வந்து நின்றார். எறிபத்த நாயனார் தன் கோடரியை உயர்த்த துடித்த அந்த நேரத்தில், புகழ்ச் சோழன் தன் வாளை எடுத்து உயர்த்தி, எறிபத்த நாயனார் பாதத்தில் தலை சாய்த்து மண்டியிட்டார்.

சிவகாமி ஆண்டார்க்கு நடந்ததை நினைத்து தான் வருந்துவதாவும், சிவனடியாரான தங்கள் கோபத்திற்கு தானும் ஒரு வகையில் காரணம் என்று கூறி, தங்கள் கோபம் தீர தன்னையும் வெட்டி வீழ்த்துமாறு எறிபத்த நாயனாரை வேண்டிக் கேட்டுக் கொண்டார். சற்று நேரம் ஸ்தம்பித்து நின்ற எறிபத்த நாயனார், கோபம் தணிந்து, தன் தவறை உணர்ந்தவராக, தன் கோடரியால் தன்னையே மாய்க்க முயன்றார். புகழ்ச் சோழன் அவரை தடுக்க முற்படும் போது, சிவபெருமான் அங்கு தோன்றி எறிபத்த நாயனாரை தடுத்து நிறுத்தினார். பட்டத்து யானையையும், இரு யானை பாகர்களையும் உயிர் பெறச் செய்தார். சிவகாமி ஆண்டரின் காயங்கள் நீக்கி அவரின் பக்தியையும், புகழ்ச் சோழனின் பெருமையையும், அவர் சிவனடியார் மேல் கொண்ட அன்பையும் போற்றி, எறிபத்த நாயனாரின் ஆழ்ந்த சிவ பக்தியை அருள் பாலித்து, அவரை சிவலோக பதவி அடைய அருள் புரிந்ததாக கதை முடிந்தது. இதனை பேராசிரியர் டாக்டர் செல்வகணபதி அவர்கள், விஜய் டிவி பக்தித் திருவிழா நிகழ்ச்சி மூலமாக கேட்க வாய்ப்பு கிடைத்தது பெரும் ஆனந்தமாக இருந்தது.

இந்தக் கதை வாயிலாக எனக்கு பசுமரத்து ஆணி போல நெஞ்சில் பதிந்த ஒன்று, கோபத்தை என்றுமே அன்பால் மட்டுமே வெல்லவோ, அடக்கவோ, தளர்த்தவோ, உருத்தெரியாமல் ஆக்கவோ முடியும் என்று. இதனை நடைமுறை படுத்திப் பார்ப்பதற்க்காக காத்துக்க கொண்டு இருந்தேன். ஒரு நாள் என் மகன் மிகுந்த கோபம் கொண்டு, தான் செய்வது அறியாது, கத்தியும், அழுத்தும், சில பொருட்களை வீசி எறிந்து கொண்டு இருந்தான். வழக்கம் போல கோபப்படாதே என்று பொறுமையாக எடுத்துரைத்தேன். அதற்கு அவன் செவிசாய்த்ததாக தெரியவில்லை. அவனருகில் சென்று அவனை தூக்க முற்பட்டேன். அவன் தன் கை கால்களை உதறியவாறு என்னை தடுத்து ஆத்திரப்பட்டான். அவன் எதிர்பார்க்காத விதத்தில் அவனை தூக்கி என் தோளில் சாய்த்தேன். அவனை தூக்கும் போது வேகமாக அசைத்த அவன் கை கால்கள், அதன் வேகத்தை குறைத்துக் கொண்டது. அவனை இறுக அணைத்தேன். அவனும் என்னை இறுக்கி, என் முதுகின் மேல் அவன் கைகளால் அழுத்தி கட்டிக் கொண்டான். அவனது அந்த அணைப்பின் இறுக்கம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இன்றும் என் நெஞ்சில் நீங்காது இருப்பது.

பிறகு அங்கும் இங்குமாக சில நிமிடங்கள் அவனை தோளில் சாய்த்து நடந்தேன். நான் ஏதும் பேசவில்லை. அவன் அழுகை, கோபம், ஆத்திரம் முழுவதுமாக அடங்கியது. கன்னத்தில் முத்தமிட்டேன். அவன் கண்களில் வழிந்த நீரைத் துடைத்தேன். என்னை விட்டு இறங்க அவனுக்கு மனமில்லாததை உணர்ந்தேன். என்ன வேண்டும் என்று மெல்லிய குரலில் கேட்டேன். எதற்கு சினம் கொண்டோம் என்று விளக்கம் கூறத் தெரியாது தோளில் சாய்ந்தபடி இருந்தான். அன்று எனக்கு இந்த அணுகுமுறை வெற்றியைத் தந்தது. பிறகு வந்த ஒவொரு கோபத்தையும் இவ்வாரே முடிந்தமட்டும் கையாளத் துவங்கனேன். முப்பத்து மூன்று வயதான என்னையே என்னால் மாற்றிக்கொள்ள முடியாத போது, நான்கரை வயதுச் சிறுவன், அனைத்தையும் சீராகச் செய்து, கோபம் கொள்ளாது இருக்க வேண்டும் என்று நினைப்பது அபத்தமானது என்பதை நன்கு உணர்ந்தேன். சிறிது மாதங்களே இருந்த அவனது கோபமும் ஆத்திரமும் வந்த வேகத்தில் மறைந்து போனது. மேலும் பேராசிரியர் டாக்டர் செல்வகணபதி சொற்பொழிவில், மேலைநாடுகளில் கடவுள்தான் அன்பு என்பார்கள், ஆனால் கீழ் நாடுகளிலோ, குறிப்பாக நம் சிவனடியார்கள் வாழ்ந்த தமிழகத்திலோ அல்லது தமிழிலோ, அன்புதான் கடவுள் என்ற நிலைப்பாடு வெகு காலத்திற்கு முன்னமே இருந்து வந்ததை சுட்டிக் காட்டினார். கோபப்படுவது அவரவர் உரிமை.அன்பால் கோபத்தை எதிர்கொள்வது குழந்தைகளிடம் மட்டும் அல்ல…

 

இரா. ராஜேஷ் குமார்

11 ஆகஸ்ட் 2016.

ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 

 

Advertisements
 
3 Comments

Posted by on August 11, 2016 in அனுபவம்

 

Tags: , , , , , , , , , , , , , , , , , ,

 
%d bloggers like this: