RSS

Tag Archives: Tamil kavithaigal

இயல்பு

வாசம் தருவதும்
அழகாய் பூத்துப் புன்னகைப்பதும்
பூக்களின் இயல்புகள்
அதற்காக அவை ஒன்றும் பெருமைப் படுவதில்லை

கரையில் நின்று கால் நனைப்பவர் கண்டு
மீன்கள்
வெட்கப்படுவதும் இல்லை
வேதனை அடைவதும் இல்லை
ஏனென்றால்
நீரில் வாழ்வதுவே மீன்களின் இயல்பு

அப்படித்தான்
புலியின் வேட்டையும்
யானையின் அகிம்சையும்
பறவையின் ஆகாய ஊர்வலமும்
பாம்பின் சீற்றமும்
குரங்கின் தோற்றமும்

ஆனால்
சுயநலமும்
ஆணவமும்
கோபமும் இறக்கமும்
ஆசையும் காமமும்
எதிர்பார்ப்பும் அழுகையும்
மகிழ்ச்சியும் பயமும் என்று
மனிதன் மட்டும்
பெருமைப்படுவதும்
வெட்கப்படுவதும்
வேதனை அடைவதும் ஏனோ?

இந்த
சமூகம்
கலாச்சாரம்
மதங்கள் நாகரீகங்கள்
கட்டுப்பாடுகள் அந்தஸ்துகள்
எல்லாம் தோன்றுவதற்கு முன்னால்
மனிதனின் இயல்பு
என்னவாகத்தான் இருந்திருக்கும்?!

 

இரா. ராஜேஷ் குமார்

13 அக்டோபர் 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

Advertisements
 
Leave a comment

Posted by on October 13, 2018 in கவிதை

 

Tags: , , , , , ,

மணமக்கள் கவனத்திற்கு

கனவுகள் நூறு நித்தமும் புடைசூழ
ஆசைகள் ஆயிரம் ஊர்கோலம் போய்வர
திருமண வயதை நெருங்கிடும் வாலிபமே!
இது கனிவான உங்கள் கவனத்திற்கு

பெண்ணைப் பெற்றவர்
பல இடத்தில் கடன் வாங்கிட
அவள் அண்ணனோ அலைந்து திரிந்து
வங்கியில் கடன் வாங்கிட
பெரும்பாலான திருமணங்கள்
சொர்கத்தில் அல்ல
வாங்கிடும் கடன்களில்தான் நிச்சயிக்கப் படுகிறது

பெண்ணிற்கு என்ன செய்வீர்கள் என்று
வெளிப்படையாய் கேட்கும் மனிதர்கள் பலர்
நீங்களாகச் செய்வதைச் செய்யுங்கள் என்று
நாசூக்காய் கேட்கும் மனிதர்கள் சிலர்
கேட்கும் விதத்தில் மட்டும் மாற்றமே தவிர
வழக்கத்தில் மாற்றம் பெரும்பாலும் இல்லை

சமூகத்தின் கட்டளையாய்
கௌரவத்தின் நிலைப்பாடாய்
திருமணச் செலவுகளை முழுமையாய் ஏற்று
பொன்னும் பொருளும் பெண்ணுடன் கொடுக்கும்
பெண்ணைப் பெற்றவரின் சுமைகளின் பாரம்
அந்தஸ்தின் வெளிப்பாடாய் இன்றும் தொடர்கிறது

இத்தனை சுமைகளும் தாங்காமல் போகவோ
கள்ளிச் செடிகளும் பல பால்வற்றிப் போயின?

உங்கள் உழைப்பில் திருமணம் நடத்திட
திருமணச் செலவை சமமாய் பகிர்ந்திட
உங்கள் உழைப்பில் பொருட்கள் வாங்கிட
வீட்டின் உள்ளே நுழையும் நாள் முதல்
சிறிது சிறிதாய் தங்கமும் சேர்த்திட
காணும் இடமெங்கும் இன்பம் தோன்றிடும்

சிந்தித்துப் பார்
சீற்கொண்டு எழுந்து வா
பெற்றவரின் ஓய்வு காலம் மகிழ்ச்சியிலே கழியட்டும்
அண்ணனும் அவன் கனவை சிதைக்காமல் இருக்கட்டும்
புல் பூண்டும் முளைக்காமல்
வேர்கொண்டு அறுத்துவிடு
புரட்சிக்கு வித்திடு
வரதட்சணை ஒழித்துவிடு

நீங்கள் வித்திடும் விதையால்
தலைமுறைகள் செழிக்கட்டும்
திருமணம் எளிதானாலும்
மணவாழ்க்கை பிரமாண்டமாக
என்றும் எனது வாழ்த்துக்கள்!

இரா. ராஜேஷ் குமார்

23 ஜூலை 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

 
Leave a comment

Posted by on July 23, 2018 in கவிதை

 

Tags: , , , , , , , , , , , ,

தாயும் ஆனவன்

குழந்தையின் முதல் தலை மழிப்பு
அது பொன்னான உன் மடியில்
அதன் காதுகுத்து வைபவமோ
அதுவும் உந்தன் மடியில்தான்

வாலிபத்தின் முதல் மணமாலை
அது பொன்னான உன் கரங்களால்
மஞ்சள் நீராடி வருபவளை
ஓலை கட்டி அழகு பார்ப்பதும்
அதுவும் உந்தன் கரங்கள்தான்

நீயே தோளில் சுமந்து வர
பால்யத்தில் பூணுலும் தரித்திட
மணமக்களின் மணமாலை பரிமாறி விளையாடிட
உன் தோளும் ஆனது மைதானமாக

வாழ்நாளின் இப்படி பல தருணங்கள்
எல்லா விழாக்களும் இனிதே நடந்தேறிட
உன் தேகமும் ஆனது விழா மேடையாக

மிட்டாயோ காத்தாடியோ
சகோதரியின் பிள்ளை முதலில் கேட்பது
என்றும் உன்னிடம்தான்

ஒரு சகோதரனாய்
ஒரு காதலனாய்
ஒரு குடும்பத் தலைவனாய்
ஒரு தகப்பனாய்
ஒரு நண்பனாய்
ஒரு கதாநாயகனாய்
அனைத்திலும் மேலாக
சகோதரியின் குடும்பத் தளபதியாய்

மாமன் என்ற ஒற்றைக் கூவல் போதுமே
விரைந்து வந்து உறவு காக்க
உன் பாசத்திற்கு அளவேது
உறவுகள் பல இருப்பினும்
என்றும் நீ ஒரு துருவ நட்சித்திரம்தான்
பரிணாமங்கள் பல எடுக்கும் நீ
தாய் மாமன் மட்டும் அல்ல
தாயும் ஆனவனும் நீயேதான்!

கூறிய சிறப்புகள்
சில இல்லாமல் இருப்பினும் கூட
தாயின் சகோதரன் அவர்
நம் பிஞ்சுக் குழந்தைகள்
இன்று கொஞ்சி விளையாடுவது போல்
அவர்களும் பால்யத்தில்
ஒன்றாக விளையாடி இருக்கக் கூடுமே?
தாயும் அன்று நிச்சயம் மகிழ்ந்திருப்பாள்
எப்படி இருந்தாலும்
நாமும் என்றும் குழந்தைகளாக மாற
மாமன் என்றும் மாமன்தான்

இரா. ராஜேஷ் குமார்

15 ஜூலை 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

 
Leave a comment

Posted by on July 15, 2018 in கவிதை

 

Tags: , , , , , ,

மரம்

தென்றல் வீச அசைபோடும்

உன் கிளைகள் ஓர் அழகு

பூக்கள் விடுத்து மலரும்

உன் புன்னகை ஓர் அழகு

காய் வளர்த்து கனி உதிர்த்திடும்

உன் தாய்மை ஓர் அழகு

வெப்பம் தாங்கி நிழல் தந்திடும்

உன் கருணை பேரழகு

 

என்னே உன் உயரம்!

என்னே உன் செழிப்பு!

பாரபச்சமற்ற உன் தன்மை

பல்லுயிர்க்கும் வீடானாய்

நான் சுவாசிக்கும் காற்றோ

நீ சுத்தீகரித்த ஒன்று

நான் வாழும் பூமியோ

நீ குளிர்வித்த சோலை இன்று

 

என் வீட்டுக் காவலானாய்

நான் உறங்க மடியானாய்

எந்தன் பொருளானாய்

எனக்கே உணவுமானாய்

உச்சி முதல் வேர் வரை

உன் சேவைக்கு கணக்கில்லை

 

வேர்களின் மூலம்

உன் சக இனத்தவரிடம்

உதவிடும் உன் பாங்கு

பேசிடும் உன் மொழி

காத்திடும் உன் கரங்கள்

ஆராய்ச்சியாளன் அறிவித்த ஆச்சர்யங்களில் ஒன்று

 

தென்றலின் மூலம்

நீ எழுப்பும் சலசலப்பின்

மொழி அறியேன் நான்

ஆனால் அதில் கோபம் இல்லை

என்பது மட்டும் என் திண்ணம்

 

இத்தனையும் நீ செய்தும்

விருதுகளும் பாராட்டும் ஏங்கும் இந்த உலகத்தில்

மாற்றம் ஏதும் இல்லாமல்

நீ நீயாக நின்றாயே!

நன்றி கூட பாராமல்…

 

ஓ மரமே!

உன்னிடம் ஒப்பிடுகையில்

நான் என்ன செய்தேன் இவ்வுலகிற்கு?

வெறும் பாரம்தான் என்பதனை

நன்குணர்ந்தேன் இப்பொழுது!

 

வெட்டினாலும் தடுக்காத உன்னை

ஆரத் தழுவி முத்தமிட

என் மனம் ஏங்குகிறது

நல்லவேளை நீ பேசுவதில்லை

ஒருவேளை உன்னைத் தவறாக

புரிந்து கொண்டு இருப்பேனோ என்னவோ

 

புத்தனே உன் அடியில் ஞானம் பெற

மனிதனும் உன் முன் சிறியவன்தான்

 

ஆனால் ஒன்று

உன்னை ஒருவேளை வளர்க்காமல் போனாலும்

வெட்டாமல் காப்பதுவே நான் செய்யும் கைமாறு

 

 

இரா. ராஜேஷ் குமார்

17 மே 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

 
Leave a comment

Posted by on May 18, 2018 in கவிதை

 

Tags: , , , , ,

வாழ்வியல் சூத்திரம்

நீ படித்தவன்

உன்னை மதிக்கிறேன்

நீ பண்பானவன்

உன்னிடம் பழகுகிறேன்

உன் அந்தஸ்து

என் மரியாதையின் அளவு

 

வாங்கியதை முடிந்தமட்டும் கொடுத்திடவும்

கொடுத்ததை தவறாமல் வாங்கிடவும்

பழகிய இந்த வாழ்வியல் சூத்திரம்

சூத்திரத்திரம் சமமானால்

உன்னோடு கைகோர்த்து

சூத்திரத்தில் பிழையென்றால்

பிரிவின் நிலைகொண்டு

இயங்கும் இந்த தன்மை

ரத்த பந்தத்திற்கும் பொருந்துமென்றால்

 

நண்பனும்

சுற்றத்தவரும்

ஊரார்

மட்டும் போதுமே

 

குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள

குடும்ப அமைப்பு என்பது தொழிற்சாலையா என்ன?

 

அப்படியானால்…

ரத்த பந்தங்களின் நம் நிலைப்பாடு

சடங்கிற்கும் சம்பிரதாயத்துக்கும்

கொடுக்கல் வாங்கல் என்ற நிலையில்

உப்பு சப்பற்ற

வெறும் பேச்சளவில்தான் என்பது

நிதர்சனமான ஓர் உண்மை.

 

 

இரா. ராஜேஷ் குமார்

4 ஏப்ரல் 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி, விமர்சகியும் கூட…)

 
Leave a comment

Posted by on April 4, 2018 in கவிதை

 

Tags: , , , , ,

இறுதி மரியாதை

உன் நெருங்கிய உறவுகளை

மேலும் நன்றாக வைத்திருக்க

மாற்றம் வேண்டும் என்றிருந்தால்

இன் நொடியே மாறிவிடு

மாரடித்துப் பயனில்லை

மாண்டவர் நிலை கண்டு

 

மாறாக

இருந்த வரையிலும்

நீ அவரைக் கையாண்ட விதம் எண்ணி

நீங்கள் வாழ்ந்த வாழ்வை போற்றி

மகிழ்ச்சியாக வைத்திருந்த தருணங்கள் பூரித்து

மெல்லியதாய்…

புன்னகைத்து வழியனுப்ப

துணிவென்பது உனக்கிருந்தால்

இன் நொடியே முத்தமிடு

நீ கடிந்தவரின் இதயத்தில்

 

அழுகை ஓலங்கள் அல்ல

அமைதியான புன்னகையைவிட

சிறந்த இறுதி மரியாதை

வேறு என்ன இருக்க முடியும்?

இறப்பு என்பது இயற்கையே

தவிர்க்க இயலாதது

 

ஆனால்…

கோபம்

கடுஞ்சொல்

ஆணவம்

பிரிவு

இயற்கையானாலும்

அப்படி அல்ல..

 

வேண்டுவது…

உன்னுள் ஓர் மறுமலர்ச்சியை

காலம் தாழ்த்தாதே

மரணம், காலம் நேரம் பார்ப்பதில்லை

வயது வரம்பற்றது

ஒவ்வொரு முறையும்

பத்திரமாகக் கையாள

உறவுகளும் கண்ணாடிகள்தான்

 

இரா. ராஜேஷ் குமார்

2 ஏப்ரல் 2018.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார் (என்றும் என் முதல் வாசகி…)

 
Leave a comment

Posted by on April 2, 2018 in கவிதை

 

Tags: , , , , , , , , ,

தட்டில் விழுந்த அமிர்தம்

கண்கள் உணவின் தோற்றம் ரசித்திட

நாசிகள் அதனின் நறுமணம் நுகர்ந்திட

செவிகள் அதன் தன் வாயிலைத் தாழிட

வாயால் நா அதை மென்று ருசித்திட

அதனுடன் கூடவே

எவ்வுலகிலும் சரி

எவ்வுயிரானாலும் சரி

உயிர்கள் பசியாற மனதால் வேண்டிட

 

தொலைக்காட்சி நிறுத்தி

கைபேசி காத்திருக்க

இசை ஒலி கூட அணைத்து

எண்ணங்களையும் தவிர்த்து

 

ஒரு நாள் இல்லை என்றாலும்

ஒரு பொழுது கூட இல்லை என்றாலும்

ஒரு கணமேனும் செய்து பார்

குடும்பத்துடன் அமர்ந்து உண்ண

 

தேவலோகத்தில் போய் அல்ல

பூலோகத்திலேயே உணரலாம்

கிடைத்ததில் அமிர்தத்தை

 

 

இரா. ராஜேஷ் குமார்

1 செப்டம்பர் 2017.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 
3 Comments

Posted by on September 1, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , ,

உன் இனியவனின் வணக்கம்

நாத்திகத்தில் ஆத்திக சாரம் கலந்து

ஆத்திகத்தில் நாத்திக பகுத்தறிவு புகுத்தி

இறுதியில்

ஆத்திக நாத்திக பேதமை மறைய

வள்ளுவனின் அறம் மட்டுமே எஞ்சி நிற்க

பாமரனும் அறியும் வண்ணம்

வேதத்தை புதிதாக்கினாய்

 

நீ பிடித்து வைத்த என்

மண்ணின் வாசனையை

எத்தனை முறை திறந்து பார்த்தாலும்

வாசம் மட்டும் குறைவதில்லை

அதுமட்டுமா

நாசிகள் அறியா வண்ணம்

ஒவொரு முறையும்

அது கண்களில் படர்ந்து

காதோரம் வருடிச்சென்று

இதயத்தில் தேங்கிவிடுகிறது

 

சிக்கலான ஒரு காதலை

கொச்சை இல்லாமல் எதார்த்தத்தில்

சர்ச்சையில்லாத உன் படைப்பிற்கு

என்றும் என் முதல் மரியாதை

 

அதுமட்டும் அல்ல

காதல்

திகில்

புரட்சி

உறவுகள்

என பட்டியல் நீளும்

உன் பன்முக இயக்கத் திறமைக்கு

 

நீ

திரையுலகில் ராஜா தான்

என் பாசத்திற்குரிய

பாரதி ராஜா!

 

 

இரா. ராஜேஷ் குமார்

13 ஆகஸ்ட் 2017.

நன்றி : ப்ரூஃ ரீடிங் – ஹம்ஸா ராஜேஷ் குமார்

 
Leave a comment

Posted by on August 26, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , , ,

கொடுத்து வைத்தவள் நீ

தன்னை முழுவதுமாக
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
அனைவருக்கும் அமைவதில்லை
அதிலும் நீ ஓர் விதிவிலக்கு
அதனால் தான் சீலை உடுத்தி
சுதந்திரமாக வீதியில் வலம் வருகிறாய்

முகத்தில் சாயம் பூசிக்கொண்டாலும்
முகத்திரை அற்றவள் நீ!

விரும்பாமல் சமூகம் தூற்றினாலும்
விரும்பியபடி வாழ்பவள் நீ!

ஆக மொத்தம்
கொடுத்து வைத்தவள் நீ!

உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ள
பழிக்கும் சமூகத்திற்கு நேரமில்லை
அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

எதற்கும் கலங்காமல்
இளமையில் கல்வியும்
கல்வியால் வேலையும்
வேலையில் நேர்மையும்
உழைப்பால் உயர்வும்
கொண்டால்…

நீ அடியெடுத்து வைக்கும்
ஒவ்வொரு நிலையிலும்

பட்டங்களும் பதவிகளும்
உன் பாதங்களில்
பிச்சை கேட்கும்

சந்தேகம் வேண்டாம்
திருநங்கை சாதனையாளர்களே!
இதற்கு சாட்சி

 
2 Comments

Posted by on May 7, 2017 in கவிதை

 

Tags: , , , , , , , , , ,

திசை மாறிய பறவைகள்

மரபு வழி வழக்கங்கள் தோன்றியன பல

காலம் வழி புழக்கத்தில் இருப்பனவோ மிகச் சில

காக்கைக்கு அன்னமிடல் அதில் ஒன்று என்றாலும்

ஆன்றோர்கள் சொன்னார்கள் அது தினம் என்றும் நன்றாகும்

 

குளித்துவிட்டுச் சென்ற சமையலறையில் அவள்

சமைத்து வைத்து நின்ற பாத்திரத்தில்

அன்னக்கரண்டி கொண்டு அன்னத்தை அவன் எடுக்க

பருப்புடன் நெய் கலந்து சுவையுடன் உப்பும் சேர்த்து

சுத்தமான இடம் பார்த்து

நீர் தெளித்து ‘கா’ அழைக்க

காக்கையுடன் அதன் பின்னே புறாக்களும் வந்து நிற்க

 

பறவைக்கு முன் இட்டு

குழந்தைக்குப் பின் இடும்

இப்படி ஓர் நேர்த்தியை

அடடா…

கண்டதில்லை வேறு மண்ணில்

 

முதல் நாள் அவன் அழைக்க

மறுநாளும் அவன் அழைக்க

அவன் மூன்றாம் நாள் தாமதத்தால்

 

‘கா’ என்று உரிமையுடன்

காகம் அவனை உரக்க அழைக்க

உயிர்களின் பந்தத்திற்கு

மொழி ஏது? இனம் ஏது?

 

இப்படியும்

பல மாதங்கள் கடக்க

கோடை விடுமுறைக்கு ஒருநாள்

குடும்பத்துடன் ஊர் சென்றான்

 

வாரங்கள் சில கழிய

திரும்பிவந்து ‘கா’ அழைத்தும்

இட்டு இருந்த அன்னத்தில்

எறும்பு மொய்த்தது பல நாட்கள்

 

குழம்பி இருந்த நேரத்தில்

அவன் ஆழ் மனதில் தோன்றியது

சொல்லாமல் சென்றதுதான்

காரணம் என்று

 

அறிவில் சமன்பாடும்

மொழியின் பயன்படும்

இல்லாத காரணத்தால்

திசை மாறிய பறவைகள்

அதில் விந்தை இல்லை என்றாலும்

 

அறிவில் சமன்பாடும்

மொழியின் பயன்படும்

இவை அனைத்தும் இருந்தாலும்

சில

திசை மாறும் மனிதர்கள்

விந்தையிலும் விந்தை

 
6 Comments

Posted by on March 24, 2017 in கவிதை

 

Tags: , , , , , ,

ஒரு பொன் மாலை பொழுது

 

இருவரும் பூங்காவின் இருக்கையில் அமர

 

இந்த உலகத்தில் உன்மேல் மிகுந்த

அன்பு வைத்திருக்கிறேன்!

இந்த உலகத்தையே இப்போது

நேசிக்கிறேன் – என்றாள் காவியா

 

புன்முறுவலுடன், அவள் முகத்தை பார்த்தபடி

அன்பு என்றல் என்ன? என்றான் ஆரியா

 

கல்லூரியில்  ஒன்றாய் படித்தவர்கள்

நான்கு வருடம் தோழமையோடு பழகியவர்கள்

தற்போது பணியாற்றுவதோ இருவேறு அலுவலகங்களில்

வசிப்பதோ இருவேறு இடங்களில்

கவியாவிடம் இருந்து ஓர் குறுஞ்செய்தி

“உன்னை உடனடியாக சந்திக்கவேண்டும்”

என்று

 

ஆரியா எதிர்பார்த்து இருந்த ஒன்றுதான்

தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இடம் தான் இந்தப் பூங்கா

நிலவுவதோ…

ஒரு பொன் மாலை பொழுது

 

சற்று நேர அமைதிக்கு பின்

அன்பை விளக்கத் தெரியாதவளாய்

ஆரியா, நீயே கூறு என்றாள் காவியா

எனக்கும் தெரியாது! என்றான் ஆரியா

 

அனால்…

தெரியாத ஒன்றை என்னிடம் வைத்திருப்பதாகக் கூறுகிறாய்

எனக்கும் தெரியாத அதை பற்றி

என்னிடம்  என்ன பதில் எதிர்பார்கிறாய்?

என்றான் அவன்

 

சிறுது நேரம் நிலவியது மௌனம்

 

சரி, அதைவிடு

எது எல்லாம் அன்பு இல்லை

என்று உன்னிடம் பகிர்ந்து கொள்ள பிரியப்படுகிறேன்

அதிலிருந்து அன்பு என்றல் என்ன

என்பதை அணுகுவோம் என்றான் ஆரியா

 

அவள், அவன் விழிகளையே நோக்கினாள்

 

கல்லூரிக் காலங்கிளில் இருந்து

உன்னிடம் பழகுகிறேன்

என்னை நீ எப்பொழுதும்

உன் உடமையாக்கிக் கொள்ளப் பார்க்கிறாய்

 

பிற பெண்கள் என்னிடம் பழகுவது கண்டு

சிலசமயம் நீ பொறாமை கொண்டதுண்டு

 

பல சமயங்கள் நீ உணர்ச்சிவயப்பட்டதுண்டு

 

காவியாவின் கண்களில் நீர் வழிந்தது

ஆரியா தன் கைக்குட்டையை அவளிடம் நீட்டினான்

 

பலசமயம் நீ என்னை மன்னிப்பதாக கூறியதுண்டு

முதலில் என் பிழைகளை தக்கவைத்துக்கொள்கிறாய்

பின்பு நீயே மறுத்தொதுக்குகிறாய்

அப்போது நீ உன்னையே மேலும் மையமாக அமைத்துக்கொள்கிறாய்

 

பல சமயம் என்னிடம் உனக்கு பகைமை தோன்றி மறைந்ததுண்டு

சில சமயம் என்னிடம் உனக்கு பயம் தோன்றி மறைந்ததுண்டு

நான் உன்னை விரும்பிகிறேனா இல்லையா என்பதற்கா

 

என்னிடம் நீ தந்த பல கவிதைகளில்

என்மேல் உள்ள உன் விருப்பத்தை

நான் உணராமல் இல்லை காவியா

ஆனால்

 

கவிதை அன்பு ஆகாது

உடைமைபடுத்திக் கொள்ளுதல்

பொறாமை

உணர்ச்சி வயப்படுத்தல்

தாபங்கள்

அழுகை

சிந்தனை

மன்னிப்பது

பகைமை

பயம்

மனதின் வெளிப்பாடு

இவையெல்லாம்

என்றும் அன்பாகாது

 

உண்மையான

மதிப்பும்

பெருந்தன்மையும்

இறக்கமும்

அக்கறையும்

மன்னிக்கும் தன்மையும்

இல்லாத இடத்தில்

அன்பு இல்லை

என்பது தெளிவு

 

எண்ணி வருவதல்ல அன்பு

வளர்க்க முடியாதது

பயற்சி செய்ய இயலாது

 

அளவுக்கும், தரத்திற்கும்

உட்பட்டது அல்ல

அன்பு

 

ஒன்றை நேசிக்கத் தெரியாது

இருக்கும் போது

உலகை நேசிப்பதாக கூறுவது

அர்த்தமற்றது காவியா

 

அன்பு இருக்கும் பொழுதுதான்

நம் பிரச்சனைகளை

தீர்க்க முடியும்

 

ஒன்றோ பலவோ அல்ல

‘அன்பு’ ஒன்றுதான் இருக்கிறது

உன்மேல் என்றும் காவியா

 

 
2 Comments

Posted by on March 11, 2017 in கவிதை

 

Tags: , , , , , ,

நெருங்கிவா முத்தமிட

உன் விழியின் மை கொண்டு
உன் மேல் கவிதை எழுதிட
உன் குங்குமம் நிறம் கொண்டு
உன்னுள் ஓவியம் தீட்டிட
உன் கூந்தலின் பூச்சரம் கொண்டு
உன்னை சுற்றிப் பூந்தோட்டம் அமைத்திட
காத்திருக்கிறேனடி கண்ணே!

உன்னை கடத்தியவர் ஒருவர் அல்ல
தொலைக்காட்சி, கைபேசி என்ற இருவர்
இவர்களுக்கு தைரியம் தந்தது யார்?
மனிதனை மிஞ்சும் தைரியசாலிகளா இவர்கள்?
ஏனென்றால்
நான் கூடவே இருக்க, உன்னை வீட்டு சிறையில் வைப்பார்களா?
மனிதனை மிஞ்சும் மாயாஜாலக்காரர்கள் இவர்கள்
இல்லையென்றால்
வீட்டுக்கு உள்ளேயே நீ நெருங்கா தூரத்தில் இருப்பாயா?

ஆங் சாங் சூகியைப் போல மீண்டு வா

வரும் பொழுது
பொன் நகைகளோடு அல்ல
புன்னகையோடு மட்டும் வா
அது போதும் எனக்கு

பேசுவதற்கோ நிறைய இருக்கிறது
நான் கூறுவது
ஊர் கதை பற்றி அல்ல
உறவுக் கதை பற்றி அல்ல
காலை உணவு பற்றி அல்ல
மாலை ஊர்வலம் பற்றி அல்ல
வீட்டுக் கணக்கு பற்றி அல்ல
வீட்டுப் பிள்ளை படிப்புப் பற்றி அல்ல

நம்மை மட்டும் பற்றியது
நம் இருவரை மட்டும் பற்றியது

மௌனமே – நம் மொழியாய் இருந்திட
நான்கு கண்களால் – நாம் அன்பாய் பேசிட
இருவருள் – நாம் ஒருவராய்த் திளைத்திட
காத்திருக்கிறேனடி கண்ணே!

காலம் தாழ்த்தாதே
நான் காத்திருந்தாலும்
காலம் என்னை அழைக்க
காத்திருக்குமோடி அன்பே!
விரைந்து வா…
நெருங்கிவா முத்தமிட.

 
Leave a comment

Posted by on November 10, 2016 in கவிதை

 

Tags: , , , , , , , , ,

ஒரே நிலா

வளர்வதும் குறைவதும்

மனிதனின் கண்களுக்குத்தான்

நிலாவுக்கு அல்ல

 

உயர்வதும் தாழ்வதும்

மனிதனின் மனங்களுக்குத்தான்

உயிர்களுக்கு அல்ல

 

கரு மேகங்கள் சூழ்ந்தால்

பௌர்ணமி இரவு கூட

அமாவாசைதான்

 

மேகங்கள் சூழ்வது இயற்கையே

மோகங்கள் சூழ்வதும் அப்படித்தான்

 

மேகங்கள் தானாக விலக

அவள் தானாக உதிப்பாள்

 

நிலா என்றும் முழுமையானது

உயிர்களும் அப்படித்தான்

 

இருவேறு கண்களானாலும்

பார்ப்பது ஒன்றுதான்

ஒரே நிலா

 

பல்வேறு உயிர்களானாலும்

இருப்பது ஒன்றுதான்

ஓர் உயிர்

 

 
Leave a comment

Posted by on September 17, 2016 in கவிதை

 

Tags: , , , ,

கண்ணாடி

முகம் காட்டும் கண்ணாடி

நீ ஒரு அழகுக் கண்ணாடி

என் மனம் காட்டும் மனிதா!

நீ ஒரு பேரழகுக் கண்ணாடி

 

உள்ளதை உள்ளபடிக் காட்டும் கண்ணாடியே

உன்னில் என்றும் வெறுப்புக் கொள்ளாத நான்

என்னை உள்ளபடிக் காட்டும் உறவே

உன்னில் மட்டும் வெறுப்புக் கொள்வது ஏனோ?

என்னை அங்கீகரிக்க மறுப்பதற்காகவோ?

 

ஒட்டக் கடினமான கண்ணாடித் துகள்களே

நீ உடைந்தால் முயற்சிக் கொள்ளாத நான்

ஒட்டக் கடினமான மனித மனங்களே

நீ உடைந்தால் மட்டும் முயற்சிக் கொள்வது ஏனோ?

என்னை அங்கீகரிக்க மறுப்பதற்காக அல்ல

என்னை மேலும் அறிய வாய்ப்பளிப்பதற்காக

 

ஏதும் சேகரித்துப் பழகாத கண்ணாடியே

உன்னில் ஏதும் வேண்டாத நான்

ஏதும் சேகரித்துப் பழகும் மனிதா

உன்னில் மட்டும் வேண்டிக் கொள்வது ஏதோ?

என்னை மேலும் அறிய வாய்ப்பளிப்பதற்காக அல்ல

என்னை நொடிப்பொழுதும் புதிதாகக் காண்பதற்காக

 

கண்ணாடி அறிவற்றது

நம் எண்ணங்கள் உணர்வுகள் அனுபவங்களை தன்னுள் பதிவாக்கமால்

என்றும் நம்மை புதிதாய் அழைப்பது

மனிதா! அறிவற்றிரு

 

 

 
4 Comments

Posted by on August 7, 2016 in கவிதை

 

Tags: , , ,

வாழாது உறக்கம்

 

ஒவ்வொரு விடியலும்

வாழ்வின் துவக்கம்

ஒவ்வொரு இரவும்

வாழாது உறக்கம்

 

ஒவ்வொரு நொடியும்

வாழ்வின் ஏக்கம்

ஒவ்வொரு இரவும்

வாழாது உறக்கம்

 

ஒவ்வொரு எண்ணமும்

வாழ்வின் படிவம்

ஒவ்வொரு இரவும்

வாழாது உறக்கம்

 

ஒவ்வொரு உறவும்

வாழ்வின் பாடம்

ஒவ்வொரு இரவும்

வாழாது உறக்கம்

 

ஒவ்வொரு உணர்வும்

வாழ்வின் தாக்கம்

ஒவ்வொரு இரவும்

வாழாது உறக்கம்

 

ஒவ்வொரு நிகழ்விலும்

வாழாது வாழ்க்கை

ஒவ்வொரு இரவும்

வாழாது உறக்கம்

 
3 Comments

Posted by on July 21, 2016 in கவிதை

 

Tags: , , ,

 
%d bloggers like this: